தையதக்க தையதக்கா
சந்சோச கூச்சலிட
தங்க மகன் பிறந்தான்!
பிள்ளைக்காக கலங்கிய காலங்கள்
மழைக்கால மேகங்களாய் கரைய
தேவனாய் பிறந்து வந்தான் !
கண் பட்டுவிடுமோயென
உன் தாலட்டுகளை
மௌனமாய் இசைத்தோமடா !
இனி
பால் வாசம் வீசும் தலையணைகளும்
சிறுநீரால் நனைந்த
படுக்கை விரிப்புகளும்
முகமெங்கும் நனைத்திடும் முத்தங்களும்
சி்ன்னஞ்சிறு செய்கையில்
நெகிழ்ந்து நீளும் நிமிடங்களும்
எங்களுக்கும் சொந்தமாகும் செல்லமே!
எந்திர வாழ்க்கையின்
மனித படிமங்களுக்கு மத்தியில்
எங்களிருவரின்
ஒற்றை உலகம் நீயடா
உனக்காக உறங்காத இரவுகளில்
ஆனந்த கண்ணன் நீயுறங்க
எங்களின் வாழ்க்கை கதைகள் தாலாட்டாய்
உன் விரல் ரேகையில்
எங்களின் வாழ்க்கை பயணம்
உந்தன் புன்சிரிப்பில்
எங்களின் உயிர் சிரிப்பு
சின்னஞ்சிறு ஆசைகளை
தர மறுத்த இறைவன்
சந்தோச பொக்கிஷத்தை
உள்ளங்கையில் தந்துவிட்டு
என்ன பெயரென சிரித்தான்
நன்றியும் கர்வமுமாய் சொன்னோம்
தனஞ்ஜெய் எனும் ஜித்து என...

நிலாப்பெண்ணின் விசும்பல்களில்
மொட்டை மாடி கவிதைகள்
வானம் பார்த்தபடி வெறுமையாய்
கனவுப்பெண்ணின் கண்ணீரில்
இரவுத் தூக்கங்கள்
கனவுகள் இன்றி மரணமாய்
மனம் பிழியும் சுமைகளாய்
என் கவிதைகள் கணக்கிறது
தாள்களை எறித்துவிடுகிறேன்
யாராவது கவிதைகளை
எடுத்து தொலைத்துவிடுங்களேன்
பெண்மையை காயப்பட்ட பொழுதுகளிலும்
எனை இமைக்குள் இருத்தியவளே
தேவதைகளின் கண்ணீர் துளிகள்
பூமிக்கு சாபங்களாம்
சபிக்கப்பட்டவனாய் நானும் தோழி ...
அப்பத்திரிக்கையின்
முதல் பக்கத்தில் நடிகன்
நடுப்பக்கத்தில்
நடிகையின் தொப்புள் தரிசனம்
இடைஇடையே- கிரிக்கெட்டின்
சில வெற்றிகளும் , பல தோல்விகளும்
சமையல் குறிப்புகள்
நகைச்சுவை படத் தோரணங்கள்
வாங்கிவிட்டீர்களா
கூவி அழைக்கும் விளம்பரங்கள்
மிக முக்கியமாய்
அரசியல் கோமாளி அறிக்கைகள்
போனால் போகட்டும்மென
கடைசி பக்க ஓரங்களில்
" இலங்கை அகதி வாழ்க்கை" என
பக்கம் நிரப்பும் கட்டுரை ..
****** வார இதழ்கள் அவ்வளவாய் படிப்பதில்லை.எதிர்பாராமல் சென்ற வார குங்குமம் பத்திரிக்கை பார்த்த பின்பு தோன்றியது. *****
இறக்கை கட்டிப்பறக்கும்
நம் அலுவல் நேரத்தில்
வள்ளுவன்,வாசுகியாய்
நாமென்றும் இல்லை
கிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும்
திரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும்
வார விடுமுறை நாட்களும்
துணிகள் துவைத்தும்
விட்டு போனவைகளை முடித்தும்
தொடங்கி விடுகிறது திங்கட்கிழமையாய்
இடையே எப்பொழுதாவது
அலைபேசியில் சத்தமிடும்
உன் "ஐ லவ் யு" குறுஞ்செய்திகள் தான்
இன்னும் உயிர்ப்பிக்கிறது
என்னையும் ! நம் காதலையும்...
மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.திருமண சந்தோசம்,அலுவலக வேலை மற்றும் புதுவீட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் எடுப்பதற்கு சற்று காலதாமதம் போன்ற காரணத்தால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை.
அலுவலகத்தில் சில பிளாக் சைட் மட்டும் பார்க்க முடியும் ஆனால் கமெண்ட்ஸ் போட முடியாது. மன்னிக்கவும்.இனி என்னால் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் அத்தனை தோழமைகளுடனும் தொடர்ந்து பயணிப்பதற்கு.

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி/09 இரு வீட்டார் சம்மதத்துடன் உறவுகளின்,நட்புகளின் வாழ்த்துக்களுடன் என் தேவதையின் கரம் பிடித்தேன் இறைவனுக்கு நன்றிகள் பல. 6வருடங்களாய் காத்திருந்த எங்களின் காதல் வெற்றியாய் திருமணம் நடந்தது.
சின்ன சின்ன மனக்கசப்புகள்,ஆராவாரம்,பயங்கள் இருந்ததால் நீண்ட நாட்களாக எதுவும் செய்ய இயலவில்லை.பிளாக் பக்கமும் வரமுடியவில்லை.காத்திருந்த,எதிர்பார்த்த தோழமைகளுக்கு நன்றிகள் பல.
நன்றியை நேரில் சொன்னால் உறவுகள் உரிமையாய் கோபித்து கொள்வார்கள்.அதற்காகவே இங்கே இந்த பதிவிடுகிறேன். திருமணத்தை நடத்தி வைத்த ,தோள் கொடுத்த வீட்டு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும்,சந்தோச கண்ணீர் துளிகளையும் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
தலைப்பில்லாத கவிதையாய்
நீயும் நானும் இங்கே
அங்கீகாரம் இல்லாததாலயே
அலைக்கழிப்பாய் நம் காதல்
யார் யாரிடமோ
அங்கீகாரம் கேட்டபடி
திசை தெரியா பறவைகளாய்
காத்து நிற்கும் தருணங்களில்
நம் காதலும்
வெட்கப்பட்டதடி அவமானத்தால்
என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள் கேட்பவளே
அது தெரியாமல் தானே
குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்
சத்தமின்றி
முத்தமிட்டு சென்றவளே
சத்தமாய்
உறவுகளிடம் பேசாததுதான் தவறோ
மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்
கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயாராய்...
நீ
அருகில் இல்லாத நிமிடங்களில்
உனை மறந்ததாய்
கண்ணீரோடு கோபங்கள் கொண்டாய்
எங்கே எப்படி சுற்றினாலும்
நான் சுற்றும்
மையப்பூமி நீதானடி தேவதையே...
அடேய்! நான் என்பவன்
கலங்கினானே ஏனடா தோழா
முத்தெடுக்க பிறந்தவன்
தவளையின் கதறல்கள் கேட்டா
உன்னுள் கலங்கினாய் நீ
விண்ணாளும் இராஜாளி
சிட்டுகுருவி சிறகொடிதல் கண்டா
கண்ணீரில் முழ்கினாய் நீ
போர்க்கள படைத்தளபதி
இரத்தகறை பார்த்தா
வாளை துக்கி எறிந்தாய் நீ
காற்றின் விண்மீன்
மிரட்டிய சுறாவளி கண்டா
விண்மீனாய் மாறினாய் நீ
மரணத்தின் வலி கண்டு
கனவுகள்,காயங்களோடு மீண்டவன்
அத்தனை சுலபமாய்
வீழ்த்திட முடியாது என்னை
இதோ இந்த கணம்
நான் என்பவன் போரிட தயார்
நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...
இங்கே நம் காதல்
பரமபத விளையாட்டில்
பகடை காய்களாய் உருட்டபடுகிறது
முகம் தெரிந்த உறவுகளும்
முகம் தெரியாத மனிதர்களும்
போகிற போக்கில் தொடர்பின்றி
பகடைகளை உருட்டி கடக்கிறார்கள்
தாயங்கள் விழுந்தால்
பரமபத ஏணியின் தொடக்கம்
தவறிய எண்கள் விழுந்தால்
பரமபத பாம்பின் தொடக்கம்
இவர்களுக்கு நம்காதல் பரமபத விளையாட்டாய்
பகடைகள் உருளும் பொழுதுகளில்
நம் காதலும் கனவுகளும் தானே
கண்ணிரோடு உருளுவது
யாருக்காவது தெரியுமா தோழி
எனக்கான கனவாய்
மஞ்சள் பூசிய தேவதை
வெட்கங்களே அதிகமாய் பூசி
கூரைபுடவைதனில் சிறுமியாய்
மணமேடையில் என்னருகில் நீ
உனக்கான கனவாய்
கருப்பு நிறத்தவன்
ஆண்மையில் வெட்கங்கள் பூசி
பட்டுவேட்டி சிறுவனாய்
தாய்மடி தேடி உன்னருகில் நான்
நெஞ்சோடு முகம் புதைத்து
கண்ணிரால் கேட்டாய் -எப்போதடா
நமக்கும் நிச்சய திருமணம் என
என்ன பொய் சொல்லி
உன்னையும் ஆட்டத்தில் ஏமாற்றுவதடி
பரமபத பாம்பின்
வால் பிடித்த நேரங்களில்
நீயும் கூட பயப்படுகிறாய்
மரணித்துவிடுவோமா என அசடாய்
நாம் தோற்றால்
இங்கே காதல் அல்லவா தோற்கும் ?
பரமபத ஆட்டத்தின் முடிவில்
பகடை காய்கள் கண்டிப்பாய்
பெட்டிக்குள் பத்திரப்பட வேண்டுமடி
அங்கும் அழகாய் காதலிப்போம் தேவதையே ...















